சிவகங்கை கிராஃபைட் தாதுவை EV பேட்டரி தரத்திற்கு உயர்த்தும் திட்டம் குறித்து ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாட்டு பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு கனிம நிறுவன (TAMIN) அதிகாரிகள் மற்றும் குழுவினர் கலந்தாய்வு மேற்கொண்ட போது எடுத்த புகைப்படம்.
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை கிராஃபைட் தாதுவை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து, மின்சார வாகனங்கள் (EV) மற்றும் மின்னணு தொழிற்துறைக்குத் தேவையான உயர்தர எலக்ட்ரோடு கிராஃபைட்டாக மாற்றும் பிரம்மாண்ட முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் இயற்கை வளங்கள் துறை சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
96%-ல் இருந்து 99.5% தூய்மைக்கு உயர்வு:
தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்படும் கிராஃபைட் தாது தற்போது சுமார் 96% தூய்மையுடையதாக உள்ளது. இதனை சர்வதேசத் தரத்திலான 99.5% தூய்மையுடைய எலக்ட்ரோடு தர கிராஃபைட்டாக (Electrode Grade Graphite) மேம்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக (Value Added Product) மாற்றவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- EV பேட்டரிகள் தயாரிப்பு: சுத்திகரிக்கப்படும் கிராஃபைட் மூலப்பொருள் மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள், மின் சாதனங்கள் மற்றும் மின்னணுக் கூறுகள் உற்பத்தியில் முக்கியக் கூட்டமைப்பாகப் பயன்படுத்தப்படும்.
- இறக்குமதி சார்பு குறையும்: உள்நாட்டிலேயே உயர்தர கிராஃபைட் உற்பத்தி செய்யப்படுவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிராஃபைட் சார்ந்த பொருட்களின் தேவை பெருமளவு குறையும்.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி:
இத்திட்டம் குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். TK. பிரபு தெரிவிக்கையில்:
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களின் மதிப்பை உயர்த்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். சிவகங்கையில் அமையவுள்ள இத்திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் தமிழ்நாடு அரசின் வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.”
இக்கலந்தாய்வுக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மேலாண்மை இயக்குநர் திரு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.