தீபாவளிக்கு முன்னதாக ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் உத்தரவு.
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்பட 67 பால் உபபொருட்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் நாளை (அக்டோபர் 28) முதல் அமலுக்கு வருகிறது.
ஆவின் மேலாண்மை இயக்குநர் எஸ். சிவராசு, ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பொருட்களின் புதிய விலைப் பட்டியல்:
1. ஆவின் நெய் விலை உயர்வு:
- 100 மி.லி. ஜார்: ரூ.85-ல் இருந்து ரூ.95
- 200 மி.லி. ஜார்: ரூ.160-ல் இருந்து ரூ.180
- 500 மி.லி. ஜார்: ரூ.365-ல் இருந்து ரூ.400
- 1 லிட்டர் ஜார்: ரூ.700-ல் இருந்து ரூ.780
- 5 லிட்டர் ஜார்: ரூ.3,600-ல் இருந்து ரூ.4,000
- 15 கிலோ டின்: ரூ.11,880-ல் இருந்து ரூ.13,000
2. வெண்ணெய் & தயிர்:
- 100 கிராம் வெண்ணெய்: ரூ.60-ல் இருந்து ரூ.70
- 500 கிராம் வெண்ணெய்: ரூ.275-ல் இருந்து ரூ.320
- 200 கிராம் தயிர்: ரூ.18-ல் இருந்து ரூ.21
- 500 மி.லி. தயிர்: ரூ.35-ல் இருந்து ரூ.40
- 1 கிலோ பிரீமியம் தயிர்: ரூ.120-ல் இருந்து ரூ.130
- 200 மி.லி. மோர்: ரூ.8-ல் இருந்து ரூ.10
3. ஆவின் இனிப்புகள் & நொறுக்குத்தீனிகள்:
- 250 கிராம் மைசூர்பாக்: ரூ.140-ல் இருந்து ரூ.160 (500 கிராம்: ரூ.310)
- 250 கிராம் முந்திரி கத்லி: ரூ.260-ல் இருந்து ரூ.280
- 250 கிராம் முந்திரி பிஸ்தா ரோல்: ரூ.320-ல் இருந்து ரூ.340
- 200 மி.லி. மில்க் ஷேக்: ரூ.30-ல் இருந்து ரூ.35
- ஆவின் மிக்சர் (200 கிராம்): ரூ.100-ல் இருந்து ரூ.110
- பட்டர் முறுக்கு (200 கிராம்): ரூ.80-ல் இருந்து ரூ.95
விலை உயர்வு குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம்:
பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிர்ச்சியைத் தொடர்ந்து, ஆவின் நிர்வாகம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது:
“உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்குப் பின்னரும் பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஆவின் பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது. மேலும், இதனால் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே நேரடியாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.