நெப்போலியனின் 200 வருட இரகசியக் கடிதம் AI மூலம் டிகோட் செய்யப்பட்டது
புது தில்லி: பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் 1809-ஆம் ஆண்டு போர்க்கால இரகசியக் கடிதத்தை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 6 மணி நேரத்தில் ஆய்வாளர்கள் டிகோட் (Decode) செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 200 ஆண்டுகளுக்கும் மேலாக விடை தெரியாமல் இருந்த இந்த வரலாற்று புதிருக்கு AI தீர்வு கண்டுள்ளது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றுச் சுவடுகளும் 200 வருட மர்மமும்: கடந்த 1809-ஆம் ஆண்டு இராணுவப் பிரச்சாரத்தின் போது நெப்போலியனால் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இரண்டு டஜன் வரிகளில் குறியீடுகள் (Symbols), எண்கள் மற்றும் எழுத்துக்களால் ஆன ரகசியக் குறியீடுகளாக உருவாக்கப்பட்டது. அதில் பிரெஞ்சு மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகளின் போர்க்கால நகர்வுகள் மற்றும் நிலைகள் குறித்த அதிமுக்கிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. பல தசாப்தங்களாக ஆன்லைன் கல்வி காப்பகத்தில் கவனிக்கப்படாமல் இருந்த இந்தக் கடிதத்தின் குறியீடுகளை உடைக்கப் பல தலைமுறை ஆய்வாளர்கள் முயன்றும் தோவியே அடைந்தனர்.
வெறும் 6 மணி நேரத்தில் AI செய்த வித்தை: அமெரிக்காவின் ‘சென்டினல்ஒன்’ (SentinelOne) சsecurity நிறுவனத்தைச் சேர்ந்த 27 வயதான AI பொறியாளர் கார்ட்டர் சர்ச் (Carter Church), ஓபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன AI மாதிரியான ‘GPT-6 Astra’-வைப் பயன்படுத்தி இந்த மர்மக் கடிதத்தை வெற்றிகரமாகப் படித்து முடித்துள்ளார்.
வழக்கமான மனித உழைப்பு மற்றும் கையேடு முறைகளைப் பயன்படுத்தியிருந்தால் இந்த குறியீடுகளை உடைக்கப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும். ஆனால், கார்ட்டர் சர்ச் AI-ன் உதவியுடன் மாலை நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே உழைத்து, வெறும் 6 மணி நேரத்தில் இதன் ரகசியத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்தத் தீர்வை, வரலாற்று இரகசியக் குறியீடுகளின் பட்டியலைப் பராமரித்து வரும் ஜப்பானியப் பொறியாளர் சடோஷி டோமோகியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
வரலாற்று ஆய்வுகளில் புதிய புரட்சி: “AI தொழில்நுட்பம் கடினமான பணிகளில் சலியாத விடாமுயற்சியைக் கொண்டுவருகிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள கார்ட்டர் சர்ச், வரலாற்று ஆய்வுகளுக்கு இது மிகப்பெரிய திருப்பம் என்று கூறியுள்ளார்.
அதேபோல, ‘கிரிப்டியானா’ (Cryptiana) வலைத்தளத்தின் உரிமையாளரான சடோஷி டோமோகியோ, “வரலாற்று இரகசியக் குறியீடுகளை உடைப்பதில் 2026-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. செப்டம்பர் பாதியிலிருந்து எனது தளத்தில் இருந்த பெரும்பாலான சிக்கலான குறியீடுகள் AI மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்களின் ‘கலவையான உணர்வுகள்’: அதேவேளையில், பல ஆண்டுகளாகத் தங்கள் வாழ்க்கையை இந்தச் புதிர்களுக்காக அர்ப்பணித்த ஆர்வலர்கள் மத்தியில் இந்த விரைவான AI வளர்ச்சி ஒருவித கலவையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
“பல தலைமுறைகளாக இருந்த புதிர்கள் தீர்க்கப்பட்டது மகிழ்ச்சியளித்தாலும், மனிதர்களால் பல ஆண்டுகள் முடியாததை AI இவ்வளவு எளிதாகச் செய்து முடித்தது ஒருவித இயலாமை உணர்வை தருகிறது” என டோமோகியோ தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், போதிய தரவுகள் இல்லாத மிகக் கடினமான சில குறியீடுகளுக்கு மனித மூளையும், AI தொழில்நுட்பமும் இணைந்து செயல்படுவதே சிறந்தது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.