செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து
மாஸ்கோ / கீவ்: ரஷ்யா மீதான போரில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் முக்கிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள எண்ணெய் முனையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகளைக் குறிவைத்து உக்ரைன் வீசிய ட்ரோன்களால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அடர்ந்த புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறிப்பு: ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் 15 பிராந்தியங்கள், கிரிமியா மற்றும் கருங்கடல் பகுதிகளில் புகுந்த உக்ரைனின் 1,015 ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பெரும் பாதிப்பு: இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் எனச் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார். பீட்டர்ஸ்பர்க் எண்ணெய் முனையம் (St. Petersburg Oil Terminal), ருசி எண்ணெய் கிடங்கு, ரஷ்ய சில்லறை விற்பனை நிறுவனமான ‘ஓசோன்’ (Ozon) தளவாட மையம் மற்றும் ‘வி.கே’ (VK) தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவு மையம் (Data Center) ஆகியவை இத்தாக்குதலால் சேதமடைந்து தீப்பற்றி எரிந்தன.
ஜாபோரிஸ்ஜியாவில் ரஷ்யா பதில் தாக்குதல்: அதே நேரத்தில், தெற்கு உக்ரேனிய நகரமான ஜாபோரிஸ்ஜியாவில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார்; 6 வயது சிறுமி உட்பட இருவர் காயமடைந்தனர். அங்கு இரு குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 18 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
டிரம்பின் ‘எரிசக்தி போர்நிறுத்தம்’ முறிந்தது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் இடையே அறிவித்த ‘எரிசக்தி போர்நிறுத்தத்தை’ (Energy Ceasefire) மீறி, ரஷ்யா உக்ரைனின் எரிசக்தித் துறைகள் மீது 76 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைன் இனி கட்டுப்படாது என்றும், மாஸ்கோ மீது சர்வதேச நாடுகள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.