2027-இல் ஜப்பானைப் பின்னுக்குத்தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா அவதரிக்கும் என ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
உலகப் பொருளாதார மேடையில் இந்தியா மற்றொரு பிரம்மாண்ட சாதனையைப் படைக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய கணிப்பின்படி, வரும் 2027-ஆம் ஆண்டில் இந்தியா ஜப்பானைப் பின்னுக்குத்தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டில் இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 4.52 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. இதற்கிடையே, உலகப் பொருளாதாரப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் நீடிக்கின்றன.
இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி:
உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை சீராக உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.எம்.எஃப், 2026-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஐ.எம்.எஃப்-இன் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன், “இந்தியா மிக வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அந்நியச் செலவாணி கையிருப்பு மற்றும் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளதால், உலகளாவிய எரிசக்தி விலை உயர்வின் தாக்கங்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது” எனப் பாராட்டியுள்ளார்.
இந்த மாற்றத்தினால், 2027-இல் ஜப்பான் 6-வது இடத்திற்குச் சரியும் என்றும், ஐக்கிய ராஜ்யம் (UK) ஜப்பானை முந்தி 5-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முடக்கத்தில் ஜப்பான் – என்ன காரணம்?
ஜப்பானிய பொருளாதாரம் 2026-இல் வெறும் 0.7% மட்டுமே வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நாடு எதிர்கொள்ளும் முக்கியச் சவால்கள்:
- முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு: வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறைவது நாட்டின் உற்பத்தித் திறனைப் பாதித்துள்ளது.
- பணவீக்கம் & பலவீனமான யென்: எரிசக்தி விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான யென் (Yen) நாணயத்தின் மதிப்பு 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்ததால் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
- வட்டி விகிதம் உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஜப்பான் வங்கி 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஜப்பான் பெருமளவில் முதலீடு செய்து வந்தாலும், டோக்கியோவின் ‘நிக்கி’ (Nikkei) பங்குச் சந்தைக் குறியீடு தொழில்நுட்பப் பங்குகளின் சரிவினால் 5% வரை வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.