தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (செப்.3) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னைக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் கிண்டி அல்லது பட்டினப்பாக்கம் ஏரியாவில் அமைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்று முதல்வர் விஜய் பேசுகையில், “புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் 1640-ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1644-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1652-ல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கிவருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால், இவ்வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை.
ராணுவத்துக்கு சொந்தமான இந்த புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு தலைமைச் செயலகம், சட்டப் பேரவை மற்றும் சில அரசுத் துறைகள் இயங்கும் மையக் கட்டிடப் பகுதிகள் மட்டுமே தமிழக அரசால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகத் தமிழ்நாடு அரசு ராணுவ அமைச்சகத்திற்கு குத்தகை தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியக் கட்டடங்களை வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாத்து, அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்காலத் தலைமுறைகளுக்கு அறியும் வகையில் உருவாக்கப்படும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு அடுத்த நூறாண்டுகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.” என்று அறிவித்தார்.