வடகிழக்கு பருவமழை வேளாண்மை துறை முன்னெச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிர் சேதங்களைக் குறைப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேளாண்மை – உழவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலைத் துறை இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட வேளாண்/தோட்டக்கலை இணை மற்றும் துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் துறை பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்:
- உழவர் செயலி பயன்பாடு: உழவர் செயலி மூலம் வழங்கப்படும் வானிலை சார்ந்த பயிர் ஆலோசனைகளை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் கள அலுவலர்கள் தீவிரமாகப் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இடையீட்டுத் திட்டம் (Contingency Plan): தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் (TNAU) தயாரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான இடையீட்டுத் திட்டத்தைப் பின்பற்றி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- இடுபொருள்கள் இருப்பு: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- தினசரி பயிர் சேதக் கண்காணிப்பு: மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கண்காணிப்புக் குழுக்கள், மழையால் ஏற்படும் பயிர் சேத விவரங்களைச் சேகரித்து அரசுக்குத் தினசரி அறிக்கையாகத் தெரிவிக்க வேண்டும்.
- வயல்களில் தேங்கும் உபரிநீர் வெளியேற்றம்: கனமழையால் வயல்களில் நீர் சூழும் பட்சத்தில், உபரிநீரைத் உடனடியாக வெளியேற்ற களப்பணியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பயிர் காப்பீடு விழிப்புணர்வு (PMFBY): நடப்பு சம்பா பருவத்தில் ஏற்படும் எதிர்பாராத பயிர் இழப்புகளைச் சமாளிக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ் விவசாயிகள் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான விழிப்புணர்வை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.