சென்னை மழையால் பாதிப்பு: ரிப்பன் மாளிகைக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு
சென்னை: எல் நினோ காரணமாகத் தென்கிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியாத நிலையில், கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையைத் தொடர்ந்து, சென்னைக்கு இன்றைக்கு ‘ரெட் அலர்ட்’ (அதி கனமழை எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் ஒலித்த அவசரக் குறுஞ்செய்தி: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி அதி கனமழை எச்சரிக்கை நிலவுவதால், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) சென்னை மக்களின் செல்போன்களுக்கு சிறப்பு எச்சரிக்கை ஒலியுடன் (Emergency Alert System) குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில், “சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:
- ரெட் அலர்ட்: சென்னை
- ஆரஞ்ச் அலர்ட்: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள்
- கனமழை கணிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 26 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு: மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தச் சென்னை ரிப்பன் மாளிகையில் இயங்கி வரும் ‘மழைகாலக் கட்டுப்பாட்டு அறைக்கு’ முதலமைச்சர் விஜய் நேரில் சென்று நேரில் ஆய்வு நடத்தினார். மழைநீர் வடிகால் அமைப்புகளின் இயக்கம், தேங்கிய நீரை அகற்றும் பணிகள் மற்றும் நிவாரண முகாம்களின் தயார்நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை வேகப்படுத்தச் சென்னையின் 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ராமன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.