உள்ளாட்சித் தேர்தலில் 'வி தி லீடர்ஸ்' இயக்கம் போட்டியிடும் என அறிவித்துப் பேசும் முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை.
முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தின் நிறுவனருமான கே. அண்ணாமலை, தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது அமைப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கும் என்று அறிவித்துள்ளார்.
அடிமட்ட அளவில் எந்தவித சுயநலமுமின்றிச் செயல்படும் தன்னார்வலர்களை உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலமே மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றத்திற்கு ‘ஒரு அண்ணாமலை’ மட்டும் போதாது:
இயக்கத்தின் நோக்கம் குறித்துப் பேசிய அண்ணாமலை, “ஒரு அண்ணாமலை என்பது ஒரு முழு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையைச் சோதித்துப் பார்ப்பதைப் போன்றது. அது மட்டுமே முழுமையான மாற்றத்தைத் தந்துவிடாது. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் மலர வேண்டுமானால், 234 சட்டமன்றத் தொகுதிகள், 12,525 கிராம ஊராட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிப் பதவிகளிலும் புதிய தலைவர்கள் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
சுயநலமற்ற தலைவர்களின் தேவை:
“தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் தெருத் தெருவாக வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு தினமும் அவர்கள் நம் வீட்டிற்கு வந்து அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்களா என்றால் இல்லை. அதனால்தான், எந்தவித எதிர்பார்ப்புமின்றிச் செயல்படும் உள்ளூர் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல், மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் போன்ற நற்பணிகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
2031 சட்டமன்றத் தேர்தலே இலக்கு:
கடந்த கால அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்கள், விரலில் வைக்கப்பட்ட மை காயும் முன்பே வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டனர். இத்தகைய இழிவான அரசியலை உடைக்கவே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதையோ, மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதையோ நாம் தவறாகக் கூற முடியாது. ஆனால், 2031 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கிற்கு என்ன வகையான மாற்றம் கிடைக்கும் என்பதில் வாக்காளர்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, வரும் 2031 சட்டமன்றத் தேர்தலிலும் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கம் போட்டியிடும் என்றும், புவி வெப்பமயமாதல் தடுப்பு மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தங்களது முதன்மை இலக்கு என்றும் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.