CERN சாதனையை முறியடித்த ‘பேய் துகள்’! 5-வது பரிமாணத்திலிருந்து பூமிக்கு வந்த விசித்திர அழைப்பு... வியப்பில் விஞ்ஞானிகள்!
கடந்த 2023-ஆம் ஆண்டு பூமி மீது மோதிய விவரிக்க முடியாத அதிசக்தி வாய்ந்த ‘நியூட்ரினோ’ (Neutrino) சிக்னல் பற்றிய புதிய அறிவியல் கோட்பாடு வெளியாகியுள்ளது.
மத்திய தரைக்கடலின் அடியில் அமைக்கப்பட்ட ‘KM3NeT/ARCA’ நீருக்கடி நியூட்ரினோ தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த சிக்னல், மனிதன் உருவாக்கிய எந்தவொரு துகளை விடவும் பல்லாயிரம் மடங்கு அதிக ஆற்றல் கொண்டதாக இருந்தது. இந்த துகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்த விடை தெரியாமல் அறிவியலாளர்கள் பல மாதங்களாகத் தவித்து வந்தனர்.
CERN-ஐ விட 30,000 மடங்கு அதிக ஆற்றல்: ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் டீட்டர் லஸ்ட் (Dieter Lüst) தலைமையிலான குழுவினர் இந்த நியூட்ரினோவை ஆய்வு செய்தனர். சுவிட்சர்லாந்தின் ‘செர்ன்’ (CERN) மையத்தில் உள்ள ‘லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்’ (LHC) உருவாக்கிய துகள்களின் ஆற்றலை விட, இந்த நியூட்ரினோ சுமார் 30,000 மடங்கு அதிக ஆற்றலுடன் பூமி மீது மோதியுள்ளது.
நியூட்ரினோக்கள் பிற பொருட்களுடன் எளிதில் வினையாற்றுவதில்லை என்பதால், இவை ‘பேய் துகள்கள்’ (Ghost particles) என அழைக்கப்படுகின்றன. இந்த சிக்னலுடன் எந்தவொரு ஃபோட்டான் (ஒளி) துகள்களும் வரவில்லை என்பதால், வழக்கமான பிற தொலைநோக்கிகளால் இதைக் கண்டறிய முடியாமல் போயுள்ளது.
5-வது பரிமாணமும் தொடக்ககால கருந்துளைகளும்: இந்த அதிசக்தி துகள் ‘பிளேசார்கள்’ (Blazars) எனப்படும் அண்டவெளி வெடிப்புகளில் இருந்தோ அல்லது தொடக்ககால கருந்துளைகளில் (Primordial Black Holes) இருந்தோ வந்திருக்கலாம் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது.
ஆனால், பிரபல ‘பிசிகல் ரிவியூ டி’ (Physical Review D) சர்வதேச ஆய்விதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வின்படி, குவாண்டம் ஈர்ப்பு விதியின்படி சரம் கோட்பாட்டிலிருந்து (String Theory) உருவான 5-வது பரிமாணக் கருந்துளையில் இருந்து இந்த நியூட்ரினோ வெளிவந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இருண்ட பரிமாணம்’ (Dark Dimension) கோட்பாடு: சரம் கோட்பாட்டில் ‘இருண்ட பரிமாணம்’ எனப்படும் கற்பனையான ஐந்தாவது பரிமாணம் உள்ளது. இங்கு ஈர்ப்பு விசை மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த ஐந்தாவது பரிமாணத்தில் உள்ள ‘காஸ்மிக் சரடுகள்’ (Cosmic Strings – விண்வெளி காலவெளியில் ஏற்படும் நுண் பிளவுகள்) சுருண்டு, சிறிய அளவிலான தொடக்ககால கருந்துளைகளாக மாறுகின்றன. இவை பிரபஞ்சத்தின் வயதிற்கு இணையான நீண்ட காலத்தில் மெதுவாக ஆவியாகும்போது (Evaporation), நியூட்ரினோக்களைக் கசியவிடுகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இந்த விசித்திரமான கருந்துளைகளிலிருந்து கசிந்த நியூட்ரினோவே 2023-இல் பூமிக்கு வந்திருக்கக்கூடும் என்று இந்த ஆய்வு முன்மொழிகிறது.