சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் விஜய்.
சென்னை: தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த வழக்காடிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 130: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130-ன் படி, டெல்லி மட்டுமின்றி இந்தியத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் முடிவு செய்யும் பிற இடங்களிலும் உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகளை அமைக்க வழிவகை உள்ளது.
- தென்னிந்திய வழக்காடிகளின் சிரமம்: தென்னிந்திய மக்கள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காகப் புதுடெல்லி வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. சென்னை ஒரு முக்கியப் பெருநகரமாக விளங்குவதால், இங்கு உச்ச நீதிமன்றக் கிளை அமைவது அனைத்து தென்மாநில மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் பெருமை: 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டிலேயே மிகத் தொன்மையான சென்னை உயர் நீதிமன்றம், மிகுந்த சட்ட அறிவும் வாதத்திறமையும் கொண்ட வழக்கறிஞர்களைக் கொண்டுள்ளது.
- முழு கட்டமைப்பு வசதிகள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்திற்கு இணையான குடியிருப்பு மற்றும் அனைத்துத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு முழுமையாக வழங்கும்.
- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32: ஏழை – பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்பதற்காகவே பிரிவு 32 உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் புவியியல் தொலைவு மற்றும் அதிக செலவு காரணமாக தென்னிந்திய மக்களுக்கு இது சாத்தியமில்லாமல் போகிறது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் (வி. வசந்தகுமார் வழக்கு – 2016) உச்ச நீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், சென்னையில் கிளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.