வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:
சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு அருகே 350 கி.மீ துாரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு வட தமிழகத்தை நெருங்கும். நாகை மாவட்டத்தில் மிக மிக அதிக மழை பெய்துள்ளது. கோடியக்கரையில் 25. செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலான கடந்த 7 மணி நேரத்தில் நாகையில் 11 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. காரைக்காலில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல் நாளை (நவ.30) காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். புயல் நகர்ந்து வரும்போது காலையில், சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும், மாலையில் 25 கிமீ தொலைவிலும் நிலவக்கூடும்.
இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்திலும், இடையிடையே 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்திலும், இடையிடையே 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.