டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: 25,000 வீரர்கள் குவிப்பு - ஜந்தர் மந்தர் பகுதி முடக்கம்!
புது தில்லி: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் இன்று அனுமதி மீறி போராட்டம் நடத்த முயல்வதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கான பின்னணி: இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (SIR) மூலம், போலி வாக்காளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையத்தின் இரண்டு ஆணையர்களே எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார். டெல்லி காவல்துறை இதற்குக் கடுமையாக அனுமதி மறுத்துள்ள நிலையிலும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு முடக்கம்:
- 25,000 வீரர்கள் குவிப்பு: அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
- முக்கியக் கட்டுப்பாட்டு மண்டலம்: ஜந்தர் மந்தர், ஜன்பத், தேர்தல் ஆணையத் தலைமையகம் மற்றும் டெல்லி காவல் துறைத் தலைமையகம் அமைந்துள்ள 1.5 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதி அதிமுக்கிய மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு மட்டும் 6,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- நவீன கண்காணிப்பு: 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், உயர் அதிகாரிகளுக்கு பாடி கேமராக்கள் (Body Cameras) மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்ய 100-க்கும் மேற்பட்ட புகைப்பட/வீடியோ கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தற்காலிகச் சிறைகள்: சட்ட ஒழுங்கை மீறுபவர்களை அடைத்து வைக்க டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 12 தற்காலிகத் தடுப்புக் காவல் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுறுத்தல்: இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மெட்ரோ சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும், களத்தில் உள்ள காவல்துறையினர் மிகவும் அமைதியாகவும், தொழில்முறை ஒழுங்குடனும் (Professional integrity) நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.