கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் ‘ரோடு ஷோ’ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த கடந்த அக். 11-ம் தேதி தவெக நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தும், காவல் துறை தலைமையகத்திலும் அனுமதி கேட்டனர். காவல்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதைத் தொடர்ந்து, வரும் டிச.5-ம் தேதி புதுச்சேரியில் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு, தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் அக்கட்சியினர் புதுச்சேரி டிஜிபியிடம் கடந்த நவ.26 அன்று மனு அளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதால் புதுச்சேரி அரசும் ‘ரோடு ஷோ’ தொடர்பான முடிவுக்கு நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.